Tuesday, May 29, 2018

கடவுள் வாழும் வீடு . 4

                   
                                                கடவுள் வாழும் வீடு . 4

இனிய வணக்கம்  அனைவருக்கும் ,


   (( நாம் விருப்ப பட்ட இடத்தில் கோவிலைக் கட்டி வா என்றால் வந்துவிடுவாரா ?? அவ்வளவு  பெரிய திறமை படைத்தவர்களா  நாம் ?? கடவுளையே நாம் சொன்னபடி கேட்க வைக்க முடியுமென்றால் இதில் யார் பெரியவர் திறமையானவர் சக்தி படைத்தவர் யார் ??? கடவுளா ?? நாமா ??))


  இந்த கேள்வியோடு அன்று முடித்திருந்தோம். இது பலருக்கும் மனதில் கண்டிப்பாக தோன்றியிருக்கும் , ஆனால் இதை யாரிடம் கேட்பது கேட்டால் நம்மை ஏதாவது சொல்லுவார்களோ என்று ஒரு விதமான சந்தேக உணர்வுடனே நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியாக கடந்து விடுகிறோம் 

நானும்  இதே மனநிலையில் தான் இதுவரை கடந்திருக்கிறேன் . பலரிடம் கேட்டாலும்  சரியான பதில் கிடைக்கவில்லை ஒவ்வொரு காரணங்கள்  சொல்லி தட்டிக் கழிக்கவே விரும்பினார்கள் . ஆத்தீகனுக்கும் நாத்திக கேள்விகள் பல உண்டு . ஆனால் அதை வெளியில் கேட்பதே  இல்லை .


ஆகம விதிப்படி பூசை புனஷ்காரங்கள் செய்தால் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் கடவுள் வருவார் என்று பெரியோர் வாக்கு . அந்த விதிகள் படி பூசை செய்பவர்கள் அவ்வளவு பெரிய உத்தமர்கள் மகான்கள் யார் இங்கே ????

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த பூசை செய்யும் மானிடர்களா இந்த உத்தம அவதாரங்கள் ??
பல கோவில்களில் தட்டில் காசு போடவில்லை என்றால்  விபூதி கூட தரமாட்டார்கள் ???? அந்த உத்தமர்கள் 

அவர்கள் எல்லாம் கடவுளுக்கு மரியாதை கொடுக்கிறார்களா  ? மனிதனுக்கா  ? பணத்துக்கா ? 

பணத்துக்கு தான் என்று நம் அனைவருக்குமே தெரிந்தே அவர்களிடம் பயந்து பவ்யம் காட்டி குனிந்து கூப்பாடு போடுவது எதற்கு (உண்மையான சிலரும் இருக்கிறார்கள் அவர்களை குறை சொல்லவில்லை ) அவர் கடவுளின் சிற்பத்திற்கு அருகில் இருக்கிறார்  என்ற ஒரே காரணத்திற்க்காக  மட்டுமே என்பதை எத்தனை பேர் மறுக்க இயலும். 

சரி கடவுள் அவரோடு அந்த இடத்தில் தான் இருக்கிறார் என்றால் அவர்களை ஏன் தண்டிப்பதில்லை என்ற கேள்வி தானாகவே தோன்றும், தண்டித்துக் கொண்டு தான் இருக்கிறார்  என்பதும் உண்மை . பலரிடம் கையேந்தி பிச்சையெடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வைத்திருக்கிறாரே  அதுவே பெரும் தண்டனை இல்லையா ? என்ன இவர்கள் ஆடம்பரமாக பிச்சை கேட்கிறார்கள் அவ்வளவு தான் .

இவர்களைப் போன்றவர்களை அழைத்து வந்து புதிய கோவில்களை  பூசை செய்ய வைத்து தினசரி கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அந்த இடத்தில் கடவுள் அருளைப் பெற இயலுமா ?


பெற முடியும் என்று தான் அழைத்து வருகிறார்கள்  என்ன செய்ய அழைத்து வருபவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று  அதையும் ஆராய்ந்து பார்த்தால் .............

தேடுவோம் கடவுள் வாழும் வீட்டை இன்னும் ..........






    

Sunday, May 27, 2018

தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம்

                             தன்னைத் தானே அழித்துக் கொல்லும் இனம் 



இது வரை தன்னை தானே அழித்துக் கொள்வதில் எந்த இனமும் இப்படி ஒரு நிலையை எடுத்திருக்க இயலாது . மிருக இனம் பறவைகள் கடல் வாழ் உயிரினங்கள் எதுவுமே தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதில் போராடுமே ஒழிய தன்னை எந்த சூழ்நிலையிலும் தானே அழித்துக் கொள்ளாது 

அதுவும் பறவை இனங்களோ மற்ற  இனத்தை விட தான் வயதாகி இறப்பது கூட உடன் வாழும் மற்ற யாருக்கும் தெரியாமலே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறது அப்படியிருக்க இந்த மானிட மிருகங்கள் மட்டும் எதற்கெடுத்தாலும் தன்னை அழித்துக் கொண்டால் தனக்கு பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஒரு வகையினர்  அதற்கு பின் என்ன ஆகிறோம் என்று தெரியாததால் உடனடியாக இந்த முடிவை எடுக்கின்றனர் 

இதக் கூட விட்டு விடலாம் ஆனால்  அனைவருமே தனக்கு தெரிந்தே அற்பத்தனமாக தன்னை அழித்துக்கொள்ள எப்படி முடிகிறது என்று தான் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை அதையும் ஒரு சிலரின் கையில் பொறுப்புகளை தானே பணம் பெற்றுக் கொண்டு எங்களை அழித்துவிடுங்கள் என்று எழுதிக் கொடுக்காதது ஒன்று தான் பாக்கி மற்றபடி தன்னை என்ன செய்தாலும் சரி என்ற நிலையில் தான் இப்பொழுது வாழ்கிறான்.

ஆடம்பரத்தின் மோகத்தை அதிகரித்த ஊடக மன்னர்கள் அதை அனுவிக்க துடிக்கும் ஆடம்பர வெறியர்கள் இருவருக்கும் இடையில் ஒரு இனம் அதாவது நடுத்தர மக்கள் என்ற இனம் அல்லல் பட்டு அவதிப் பட்டு வாழ்ந்துகொண்டிருகிறது 

இவர்கள் தான் வர்த்தக உலகின் பலிகடாக்கள். இரண்டு வலிகள் இருந்தாலும் அழிவு வழியை மட்டுமே தேர்ந்தெடுக்கும் மானிட இனம் . இவர்களின் வாழ்க்கை முறைக்கு பிச்சைக்காரர்களாக வாழ்வது எவ்வளவோ மேல் . மன்னிக்கவும் அவர்கள் வாழ்க்கை மிக அற்புதமான வாழ்க்கை கிடைத்தால் சாப்பிட்டு நிம்மதியாக வாழ்பவர்கள் நாளை என்ன செய்ய என்று கவலை இல்லாத மானுட இனம்.

(தேடுவோம் தீர்வை நோக்கி ........)

Saturday, May 5, 2018

கடவுள் வாழும் வீடு . 3

                                                   
                                           கடவுள் வாழும் வீடு . 3

                                 




    வணக்கம் அனைவருக்கும் ,

நேற்றைய பதிவில்  நான்கு நபர்கள் நான்கு விதமான முறைகளில் கோவிலுக்கு சென்று வழிபட போகிறார்கள். அவர்களுக்கு கடவுள் எவ்வாறு அருள் புரிவார் என்று  பல விதமான யோசனைகளை நமக்கு தோன்றியிருக்கும் 

இங்கு ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது . கடவுள் உடல் சுத்தத்தை எதிர் பார்த்து அருள் புரிவாரா (அ) மன சுத்தத்தை வைத்து அருள் புரிவாரா ? என்ற  மிகப் பெரிய சந்தேகத்தை நம் மனதில் தானாக தோன்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

(கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கு நாம் செல்ல வேண்டாம் )  இருக்கும் என்று நினைப்பவருக்கு  இருக்கிறார்.  இல்லை என்று நினைப்பவருக்கு இல்லை  அதனால் அந்த ஆராய்ச்சிக்கு நாம் செல்ல வேண்டாம் 

சிவ வாக்கியரின்  பாடலில்  

" நட்ட கல்லைச் தெய்வமென்று  நாலு  புட்பம் சாத்தியே 
சுற்றி வந்து  மொண மொணவென்று  சொல்லும் மந்திரம் ஏதடா ?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?          (சிவ வாக்கியர்  பாடல்  -520)

இதை  சொன்னவர் நாத்திகர் அல்ல ஆத்திகர்  


இவர்கள் நால்வரும் நட்ட கல்லை நோக்கி  தான் செல்கின்றனர் நான்கு வழிகளில் கடவுளின் அருள் கிடைத்திருக்குமா ??  நட்ட கல்லில் கடவுள் நேரடியாக தொடர்பு கொள்ளுவாரா ? 

    சிவ வாக்கியரின் சொல்வதும் பொய்யென்று ஒதுங்கி சென்று விட முடியாது ஆனால் அது மட்டுமே உண்மையென்றால் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்கள் அதற்காக பல இலட்சங்களை செலவு செய்து பூசை செய்து வழிபடுகிறவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றல்லவா முடிவாகிவிடும்.

   அதுவுமில்லாமல் இப்பொழுதெல்லாம் அடுத்த தெருவில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது அந்த தெருவில்  வசிப்போர் ஏதாவது சொல்லிவிட்டால் உடனே கோபம் வந்து தன தெருவிலேயே கோவிலைக் கட்டிக் கொள்கிறார்கள்  உடனே பூசை செய்து கடவுளை அவர்கள் தெருவிற்கே வரவைக்கும் வல்லமை படைத்தவர்கள் மிக மிக பெரியோர்கள் வாழும் உலகு இது கடவுளும் உடனே அங்கு வந்து அருள் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார் . தீபாராதனை தட்டில் விழும் காசைப் பொறுத்து எலுமிச்சை பழமாகவும் , சாமியின் கழுத்தில் கிடக்கும் மாலையைக் கூட தன கழுத்தில் வந்து விழும் அளவிற்கு அருள் புரிகிறார் இன்றைய நவ நாகரீக கடவுள் . இதைப் பெருமையாக காட்டிக்கொள்ள தட்டில் கொஞ்சம் அதிகமாக பணத்தை போட்டு அருளைப் பெற்றுக் கொள்கின்றனர் .


இப்படி நாம் நினைத்த இடத்தில் கோவிலைக்கட்டி நாமே கடவுளை வரவைக்க முடியுமென்றால் கடவுள் நமக்கு என்ன அடிமையா ?  நாம் விருப்ப பட்ட இடத்தில் கோவிலைக் கட்டி வா என்றால் வந்துவிடுவாரா ?? அவ்வளவு  பெரிய திறமை படைத்தவர்களா  நாம் ?? கடவுளையே நாம் சொன்னபடி கேட்க வைக்க முடியுமென்றால் இதில் யார் பெரியவர் திறமையானவர் சக்தி படைத்தவர் யார் ??? கடவுளா ?? நாமா ??




கடவுள் வாழும் வீட்டை தேடுவோம் தொடர்ந்து ...........


முந்தைய பதிவுகளைப் படிக்க 

கடவுள் வாழும் வீடு .1
https://anbedeivam.blogspot.in/2018/04/1.html



கடவுள் வாழும் வீடு . 2
https://anbedeivam.blogspot.in/2018/05/2.html

Friday, May 4, 2018

கடவுள் வாழும் வீடு . 2



                                              கடவுள் வாழும் வீடு . 2



 அனைவருக்கும் இனிய வணக்கம்.
  
கடவுள் வாழும் வீடு அப்படின்னு தலைப்பு வச்சிட்டு ஏதோ வேற வேற கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கானே என்னடா இதுன்னு நினைக்க தோணும் கோவிலுக்கு போகனும்ன அதுக்கான வழியை தேர்ந்தெடுத்து தான போகணும் அது போலத்தான் இதுவும் 

 சரியான வழியில் போனாத்தான சரியான இடத்தை அடைய முடியும். அதுக்கு தானே நாம எங்க போனாலும் முதலில் அதற்கான வழியைத் தெரிந்து கொண்டு செல்ல ஆசைப்படுகிறோம்.

 சரி சரி கோபப்படாதீங்க விசயத்துக்கு வருவோம்

 மனம் என்னும் மந்திரக்கோலை  சரியான திசையில் செயல்படுத்த விரும்பினாலும் நம்மை விட்டு வேறு இடத்திற்கு சென்று வம்பில் மாட்டி விட்டு சண்டை உருவாக்குவதே அதன் (மனம்) வேலையாக பலருக்கும் பல காலமாக செய்துகொண்டிருப்பதே வாடிக்கையாகி விட்டது .

எல்லாம் முடிந்த பிறகு யோசித்து பார்த்தாலும் நமக்கு அதன் செயல் விளங்குவதே இல்லை. இங்கு தான் நமக்கான பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நடந்த நிகழ்வுகளை மட்டுமே நினைத்து நினைத்து நடக்க போகும் நிகழ்வுகளிலும் பிரச்சனையை உருவாக்கி கொள்வதிலேயே நம் மனது செல்கிறதே தவிர அதற்கான விடையை அறியமுடிவதே இல்லை 

ஏன் இந்த அவல நிலை ???

  சில தவறுகள் நமதாக இருந்தாலும் எற்றுகொள்வதில் நமக்கு மிகுந்த தயக்கம் இருக்கிறது அந்த தவறுகளை மறைக்க முயல்கிறோமே தவிர அதை தான் தான் செய்தோம் என்று வெளிப்படுத்த விரும்புவதேயில்லை .

சின்ன சின்ன தவறுகளுக்கும் அதற்கான தண்டனைகள் உண்டு என்பதை மறந்து  மேலும் மேலும் அதையே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம் உதாரணமாக ஒன்று சொல்கிறேன் தினசரி கோவிலுக்கு செல்லும் சிலரை பற்றி பார்க்கலாம் 

ஒருவர் ஆற்றில் குளிக்க வருகிறார் வந்தவுடன் தன் ஆடைகளை துவைத்து சுத்தமாக்கி பின்னர் தானும் நன்றாக ஆற்றில் மூழ்கி தைக்கும் குளித்து சுத்தம் செய்து கொண்டு வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார் 

அடுத்தவர் வருகிறார் தன் ஆடைகளை கழற்றி கரையின் மேலே வைத்துவிட்டு அவர் நன்றாக குளித்துவிட்டு மீண்டும் அதே ஆடையை உடுத்திக் கொண்டு வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார்

இன்னொருவர் வருகிறார் அவர் ஆடைகளை கழற்றாமல் கை கால் மற்றும் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு நேராக வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார்

மற்றொருவர் வருகிறார் ஆடையையும் கழட்டவில்லை கைகால்களையும் கழுவவில்லை ஆற்றில் ஓடும் நீரை மட்டும் கையால் அள்ளி மூன்று முறை தலையில் தெளித்துக் கொண்டு வழிபாடு செய்ய கோவிலுக்கு செல்கிறார்


இவர்கள் வழிபாடு செய்யும் கடவுள் யாருக்கு எப்படி அருள் புரிவார் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் ........... ( நானும் இதைப் படித்தவுடன் மிகுந்த யோசனை செய்தேன் ஆனால் அதற்கான விடையை கண்டுபிடிக்க எனக்கு .....) 

தேடுவோம் வாருங்கள் அடுத்த பதிவில் .............

முதல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் 








   கடவுள் வாழும் வீடு . 1




கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...