Wednesday, February 23, 2011

தவறாமல் படியுங்கள்


கோட்டயம் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக 1970ல் தற்காலிகப் பணியில் சேர்ந்தவர் பி.யூ.தாமஸ். இரக்க குணம் படைத்தவர். ஏழை எளிய மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார். ஆஸ்பத்திரியில் வரும் எத்தனையோ ஏழைகள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்ட அவருக்கு, தன்னால் இயன்ற ஓரிருவருக்காகவாவது உணவு கொடுத்தால் என்ன என்று தோன்ற அதை உடனடியாக செயல்படுத்தினார். ஓரிருவர் என்று ஆரம்பித்தது நாளடைவில் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது. தன் குறுகிய வருமானத்தில் பலருக்கு உணவளிக்க ஆரம்பத்தில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.

ஆனால் அவரது நல்ல சேவையைக் கண்ட சிலர் தாங்களும் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒருவர் அரிசி தர முன் வந்தார். இன்னொருவர் உணவு கொண்டு வர வாகன உதவி செய்ய முன் வந்தார். இப்படி பலரும் பல விதங்களில் உதவ முன் வந்தனர். பணமாகவோ, பொருளாகவோ தர முடியாதவர்கள் தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர். இன்று கிட்டதட்ட 1200 பேருக்கும் மேலாக இவர் அமைத்த நவஜீவன் என்ற அமைப்பு மூலம் உணவு பெறுகிறார்கள். இன்று நவஜீவன் சமையலறையில் பணியாளர்களும், தன்னார்வத் தொண்டர்களுமாக சேர்ந்து சுமார் 50 பேர் பணி புரிகிறார்கள்.

மனநிலை சரியில்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பாக தங்க இடமும், உண்ண உணவும் தரவும் அவர் முற்பட்டார். மனநிலை சரியில்லாதவர்களை பராமரிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் கருணை உள்ளம் படைத்த அவருக்கு அவர்களை அப்படியே விட மனமில்லை. அன்பும் ஆதரவும் காட்டி அவர்களுக்கு அபயம் அளித்தார். அப்படி அங்கு வாழ்ந்து குணமான பலர் அவருடைய சேவையில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், நாளடைவில் பலருடைய உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்பதற்கு தாமஸின் முயற்சிகளே உதாரணம்.


இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உதவி வரும் தாமஸிற்கு நான்கு மகள்கள். ஒரு மகன். மகன் ஏழு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். இப்படி கருணையே உருவானவருக்கு கடவுள் கருணை காட்டத் தவறி விட்டாரே என்ற வருத்தத்தில் ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டார். "ஏழை எளியவர்களுக்கு இத்தனை சேவை புரியும் உங்கள் ஒரே மகனை இறைவன் பறித்துக் கொண்டாரே என்று தங்களுக்கு வருத்தமாயில்லையா?"

அந்தக் கேள்வி நியாயமானதே. எப்படிப்பட்டவருக்கும் அப்படி தோன்றாமல் இருப்பது அரிது. ஆனால் தாமஸ் சொன்னார். "ஏழு வயதே ஆயுள் உள்ள ஒரு குழந்தையை பூமியில் பிறப்பிக்க வேண்டி இருந்த போது இறைவன் அந்தக் குழந்தையை பாசத்துடன் வளர்க்க ஏற்ற நபராக என்னைக் கண்டதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இது கடவுள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றே எண்ணுகிறேன்"
 
மகன் இறந்ததும் நல்லதற்குக் காலமில்லை என்று விரக்தி அடைந்து தன் சேவைகளை நிறுத்தாமல், கடவுள் மீது கோபம் கொண்டு ஏசாமல், இப்படி எண்ண முடிந்த நபரைப் பற்றி இனி என்ன சொல்ல?

இது அனைவரும் அறிய வேண்டுமென்பதே என் விருப்பம்...............

உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்....

6 comments:

  1. இந்த மனநிலை ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் .............

    ReplyDelete
  2. மிக உபயோகமான பதிவு

    ReplyDelete
  3. ithu palarukku oru seythiye aanaal ithu oru maaperum seyal.........

    ReplyDelete
  4. ethu pondra manitha naeyam erupavargalidamae endrum nammal kaduvulai kaana mudikerathu...

    ReplyDelete
  5. இந்த காலத்தில் இப்படி ஒருவரா ,இவர் தான் உண்மையான கடவுள்.....,தாமஸ் உங்களுக்கு என் மனமார்த நன்றி ......

    ReplyDelete
  6. @cherma raj

    நீங்கள் சொன்னது உண்மை கருத்து...........

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...